கண்டியில் பிறந்த
கண்ணாடி வைரமே..!
கேரளத்தில் கால் வைத்த
கற்பூரத் திலகமே..!
தமிழகத்தில் தலையெடுத்த
தங்கத் திலகமே..!
மங்காப் புகழ் கொண்ட
மக்கள் திலகமே..!
படிக்காத மேதையான
காமரசரின் வழி நின்றாய்..!
கல்லாத பிள்ளைகளுக்கு
கல்வி தரும் தந்தையானாய்..!
உணவில்லாத பிள்ளைகளுக்கு
உணவளிக்கும் அன்னையானாய்..!
வெறுங்காலில் பள்ளி சென்ற பிள்ளைகட்கு
காலணி வழங்கிய கர்ணனாய்..!
கந்தலாடை அணிந்த மாணவர்கட்கு
புத்தாடை வழங்கிய புரவலனானாய்..!
வறியோர்க்கெல்லாம்
வாரிக் கொடுத்து வள்ளலானாய்..!
எதிரிகளுக்கு நன்மை செய்து
எல்லோர்க்கும் நண்பனானாய்..!
பொன் பொருளில்லார்க்கு
பொன் மனச் செம்மலானாய்..!
இலங்கைத் தமிழர்களுக்கு இரந்து
உண்மைத் தமிழனாக மாறினாய்..!
நின் காலத்தில் ஆண்மையுடன்
ஆட்சி செய்த ஆண்மகனானாய்..!
ஏழைகளின் குறிப்பறிந்து ஏற்ற
திட்டங்கள் வகுத்த ஏந்தலானாய்..!
இல்லாதோர் வாழ்வில்
ஒளியேற்றிய ஒளி விளக்கானாய்..!
எல்லோரின் இதயங்களிலும் இடம்பிடித்து
அவர்களின் இதயக்கனியானாய்..!
அண்ணாவின் வழி நின்று
அன்னமிட்ட கையானாய்..!
என்னென்று சொல்ல நின் புகழை..!
எழுத்துக்கள் போதவில்லை
உன் புகழ் சொல்ல..!
ஏடுகள் தேவையில்லை
உன் புகழ் சொல்ல..!
கல்லாத பரம்பரையில் வந்தவனுக்கு
கல்வி கற்க வழி வகுத்த வள்ளலே..!
தமிழகத்தை ஆட்சி செய்த
தங்கத் திருமுகத் தமிழே..!
இலங்கைத் தமிழர்க்கு கரம் கொடுத்த
கார் வண்ண முகிலே..!
உன் காலத்தில் பயின்ற
மாணவர்களில்
அடியவனும் ஒருவனானேன்..!
நின் திருமுகம் காணாத
தீயவனானேன்..!
நீ இருந்து செய்த
சாதனைகள் கொஞ்சமல்ல..!
இருந்திருந்தால் நீ செய்யவிருக்கும்
சாதனைகளுக்கும் பஞ்சமல்ல..!
உனை இழந்து தவிக்காத
நெஞ்சங்களும் நெஞ்சமல்ல..!
எங்களுக்கு மூச்சளித்து
உன் மூச்சை நிறுத்திக் கொண்டாய்..!
எங்களுக்காக துடித்த நீயோ
உன் இதயத் துடிப்பை நிறுத்து விட்டு
எங்களை துன்பத்தில் துடிக்க விட்டாய்..!
கடல் போன்ற மனதைக் கொண்டு கடைசியில்
கடற்கரையில் தூங்குகின்றாய்..!
சந்தனமாய் மணம் பரப்பிய நீ - கடைசியில்
சந்தனப் பெட்டியில் சாந்தமானாய்..!
நீ இறந்தாலும்
ஏழைகளின் இதயங்களில்
என்றும் வாழுகின்றாய்..!
நாடோடியாய் இருந்த நீ
நம் மக்களின் மனதில்
நாடோடி மன்னனாய் வீற்றிருக்கின்றாய்..!
உலகம் சுற்றிய வாலிபனே..!
இந்த பூமி உனைப் பிரிந்து
இன்றோடு 22 ஆண்டுகளாயிற்று..!
எங்களின் கண்களும் குளமாயிற்று..!
மனங்களும் கனமாயிற்று..!
(எங்களின் இதயக்கனிக்கு என் கண்ணீர் கவியாஞ்சலி சமர்ப்பணம்)