பிரபல மருத்துவர் அவர்...
பிணிகளைத் தீர்ப்பதில் வல்லவர்
அரசு மருத்துவமனையில்
பணியாற்றுபவர்...
பணி நேரம் போக தனியாகவும்
மருத்துவம் பார்ப்பவர்...
அரசு மருத்துவ மனையில்
அமர்ந்திருந்த
மருத்துவரிடம் வந்தார்
ஓர் ஏழை...
என்னென்று வினவினார்
மருத்துவர்
ஐயா...
வயிற்றில் சுரீரென்று வலி
வாயினில் புண்...
தாளமுடியவில்லை
பிணி நீக்கவேண்டும் ஐயா...
மருத்துவர் தன்
பரிசோதனைகளைச் செய்தார்...
உடலில் உள்ள குறைகளை
ஓரளவு கண்டறிந்து கொண்டபின்
ஏழையிடம் வினவினார்...
ஐயா நேற்று என்ன சாப்பிட்டீர்..?
ஒன்னும் சாப்பிடலீங்க
சாயங்காலம்தான்
கொஞ்சம் கஞ்சி குடிச்சேன்...
அதற்கு முதல் நாள்
என்ன சாப்பிட்டீர்..?
காலையில் கொஞ்சம்
பழையது சாப்பிட்டனுங்க...
அப்புறம் ராவுப்பொழுதுக்கு
கொஞ்சம் கஞ்சிங்க...
பிணிக்கு காரணம் புரிந்தது
சரியான ஆகாரம் அந்த
ஏழைக்கு இல்லை...
அதனால் வந்த பிணி இது என்று...
தேவையான மருந்துகளை
குறித்துக் கொடுத்து...
ஐயா உணவு உண்டபின்
இந்த மருந்துகளை
உட்கொள்ளுங்கள்...
சாப்பிட்டதுக்கு பொறவு
மாத்திர சாப்பிடனும்னு
சொல்றீங்க சாமி...
அந்த சாப்பாடுதாங்க
என் வீட்ல பிரச்சினை...
உழைக்கத் தயரா இருந்தும்
வேலை வெட்டியில்ல...
அதனால
எங்க சட்டியும் காயுது
வட்டியும் காயுது...
அதனாலதாங்க உங்க
வயிறும் இப்ப நோகுது...
என்று பதிலிறுத்த மருத்துவர்
கவலை கொள்ளாதீர்
நாளை வந்து எனை பாரும்
வேலைக்கு வழி சொல்கிறேன்...
என்று ஏழையை
வழியனுப்பினார்
நம் மருத்துவர்.
மாலை வேளையில்
தனது தனி மருத்துவமனையில்
மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்
அம் மருத்துவர்.
வாசலில் வந்து நின்றது
வாட்டமான கார் ஓன்று
அதிலிருந்து நடக்க முடியதாபடி
நடந்து வந்தார்
அவ்வூரின் செல்வந்தர்களில்
ஒருவரான செல்வராஜ்...
டாக்டர்...
நடக்க முடியல...
மூச்சு வாங்குது...
வயிறு திம்முன்னு இருக்குது...
இதைச் சொல்லவே அவருக்கு
மேல் மூச்சுகீழ் மூச்சு வாங்கியது...
பரிசோதித்தார் மருத்துவர்
உங்களுடைய அன்றாட
உணவு முறை பற்றி
சொல்லுங்கள் என்றார்...
காலையில் டிபன்
மதியம் புல் மீல்ஸ்
மாலையில் சிற்றுண்டி
இரவு பிரியாணி
இடையிடையே நொறுக்குத் தீனி
இதுதான் என்னுடைய
அன்றாடஉணவு முறை...
நாளையே பிரசவித்துவிடும்
நிலையில்
அவரது வயிறு
உப்பிக் கொண்டு நின்றது...
பிணியின் காரணத்தை
அறிந்து கொண்ட மருத்துவர்
மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு
உணவு முறைகளை
மாற்றுங்கள்...
நொறுக்குத் தீனிகளை
ஒழியுங்கள்...
எளிய உணவுகளும்
காய்கறி, கனிகளையும்
சாப்பிடுங்கள்
தினமும் அரை மணி நேரம்
நடைப் பயிற்சி...
கார் வேண்டாம்
சைக்கிள் ஓட்டுங்கள்...
என்றார் மருத்துவர்...
தனிமையில் இருந்த
மருத்துவரின் சிந்தையில்....
காலையில் வந்த
ஏழையின் வயிறு தோன்றியது...
சுவற்றில் ஓட்டப்பட்ட
காகிதம் போல்
கறுத்துச் சிறுத்த வயிறு...
மாலையில் வந்த
செல்வந்தரின் வயிறும்
தோன்றியது...
செல்வச் செழிப்பும்
உணவுக் கொழிப்பும் மிகுந்த
பானையைப் போன்ற வயிறு...
இருவரும் ஒரே திசையிலிருந்துதான்
வருகின்றனர்... ஆனால்
எதிரெதிர் திசையில் நிற்கின்றனர்...
ஏழைக்கு... வேலையுமில்லை
உணவுமில்லை...
பசியும் பிணியும் வாட்டுகிறது..?
செல்வந்தனுக்கு வேலையுமுண்டு
அதிகப்படியான உணவுமுண்டு
தொப்பையும், பிணியும்
வாட்டுகிறது..?
இந்த ஏற்றத் தாழ்வு
எங்கிருந்து வந்தது?
இதை எப்படி ஒழிப்பது..?
இருப்பவன் இல்லாதவனுக்கு
கொடுத்து உதவ வேண்டும்..!
முடிகின்ற காரியமா இது?
எல்லோரும் சமம்
என்ற நம் அரசின்
கொள்கை, கோட்பாடு
இங்கு கோமாளித்தனமாகி விட்டதே..?
இல்லாதவன்
உழைக்கத் தயாராக இருந்தும்
வேலையுமில்லை..?
வேளா வேளைக்கு
உணவுமில்லை..?
அட என் பாரதமே...
இந்த ஏழைகள் நிலை
என்று மாறும்..?
அவர்களின் துயரங்கள்
என்று தீரும்..?
மருத்துவரின் மனதில்
ஆயிரம் கேள்விக்கணைகள்...
பதிலளிப்போர் யார்..?
பாமர மக்களைக் காப்பவர்கள் யார்..?
உங்களுக்காவது
விடை தெரிந்தால் சொல்லுங்களேன்..!
(இதை எழுதிய சூழல்: பண்ருட்டியில் பணி நிமித்தமாக அறை எடுத்து 6 மாத காலம் தங்கியிருந்தேன். அதில் ஓரு நாளான 16.10.2004, அன்று காலை 8.00 மணியிலிருந்து, காலை 8.30-க்குள் எழுதி முடித்து விட்டேன். அதை சிற்சில மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறேன்..)
Monday, 24 August 2009
Wednesday, 19 August 2009
என் அறிமுகம்
வசன கவிதை எழுதுவது எப்படி? அதன் விதிகள், இலக்கணங்கள் என்னென்ன என்பதை நானறியேன்... மகா கவி பாராதியின் வசன கவிதை படித்'தேன்'.
அதன்பிறகு, எனக்குள்ளும் அந்த ஆசை முளைத்துக் கிளைத்தது. எழுதத் துவங்கிவிட்டேன். எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கருத்துப் பிழையின்றி எழுதுவேன்...
வசனகவிதைக்குரிய இலக்கணங்களை மீறியருந்தால், தமிழார்வலர்கள், தமிழாய்ந்தவர்கள் இச்சிறுவனை மன்னித்தருள வேண்டுகிறேன். நன்றி
அதன்பிறகு, எனக்குள்ளும் அந்த ஆசை முளைத்துக் கிளைத்தது. எழுதத் துவங்கிவிட்டேன். எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கருத்துப் பிழையின்றி எழுதுவேன்...
வசனகவிதைக்குரிய இலக்கணங்களை மீறியருந்தால், தமிழார்வலர்கள், தமிழாய்ந்தவர்கள் இச்சிறுவனை மன்னித்தருள வேண்டுகிறேன். நன்றி
Subscribe to:
Posts (Atom)