Thursday 24 December, 2009

மங்காப் புகழ் கொண்ட மக்கள் திலகமே..! - எம்.ஜி.ஆரின் நினைவுநாள் கவிதை




கண்டியில் பிறந்த
கண்ணாடி வைரமே..!
கேரளத்தில் கால் வைத்த
கற்பூரத் திலகமே..!
தமிழகத்தில் தலையெடுத்த
தங்கத் திலகமே..!
மங்காப் புகழ் கொண்ட
மக்கள் திலகமே..!

படிக்காத மேதையான
காமரசரின் வழி நின்றாய்..!
கல்லாத பிள்ளைகளுக்கு
கல்வி தரும் தந்தையானாய்..!
உணவில்லாத பிள்ளைகளுக்கு
உணவளிக்கும் அன்னையானாய்..!
வெறுங்காலில் பள்ளி சென்ற பிள்ளைகட்கு
காலணி வழங்கிய கர்ணனாய்..!
கந்தலாடை அணிந்த மாணவர்கட்கு
புத்தாடை வழங்கிய புரவலனானாய்..!

வறியோர்க்கெல்லாம்
வாரிக் கொடுத்து வள்ளலானாய்..!
எதிரிகளுக்கு நன்மை செய்து
எல்லோர்க்கும் நண்பனானாய்..!
பொன் பொருளில்லார்க்கு
பொன் மனச் செம்மலானாய்..!
இலங்கைத் தமிழர்களுக்கு இரந்து
உண்மைத் தமிழனாக மாறினாய்..!
நின் காலத்தில் ஆண்மையுடன்
ஆட்சி செய்த ஆண்மகனானாய்..!
ஏழைகளின் குறிப்பறிந்து ஏற்ற
திட்டங்கள் வகுத்த ஏந்தலானாய்..!
இல்லாதோர் வாழ்வில்
ஒளியேற்றிய ஒளி விளக்கானாய்..!
எல்லோரின் இதயங்களிலும் இடம்பிடித்து
அவர்களின் இதயக்கனியானாய்..!
அண்ணாவின் வழி நின்று
அன்னமிட்ட கையானாய்..!

என்னென்று சொல்ல நின் புகழை..!
எழுத்துக்கள் போதவில்லை
உன் புகழ் சொல்ல..!
ஏடுகள் தேவையில்லை
உன் புகழ் சொல்ல..!

கல்லாத பரம்பரையில் வந்தவனுக்கு
கல்வி கற்க வழி வகுத்த வள்ளலே..!
தமிழகத்தை ஆட்சி செய்த
தங்கத் திருமுகத் தமிழே..!
இலங்கைத் தமிழர்க்கு கரம் கொடுத்த
கார் வண்ண முகிலே..!
உன் காலத்தில் பயின்ற
மாணவர்களில்
அடியவனும் ஒருவனானேன்..!
நின் திருமுகம் காணாத
தீயவனானேன்..!

நீ இருந்து செய்த
சாதனைகள் கொஞ்சமல்ல..!
இருந்திருந்தால் நீ செய்யவிருக்கும்
சாதனைகளுக்கும் பஞ்சமல்ல..!
உனை இழந்து தவிக்காத
நெஞ்சங்களும் நெஞ்சமல்ல..!

எங்களுக்கு மூச்சளித்து
உன் மூச்சை நிறுத்திக் கொண்டாய்..!
எங்களுக்காக துடித்த நீயோ
உன் இதயத் துடிப்பை நிறுத்து விட்டு
எங்களை துன்பத்தில் துடிக்க விட்டாய்..!
கடல் போன்ற மனதைக் கொண்டு கடைசியில்
கடற்கரையில் தூங்குகின்றாய்..!
சந்தனமாய் மணம் பரப்பிய நீ - கடைசியில்
சந்தனப் பெட்டியில் சாந்தமானாய்..!

நீ இறந்தாலும்
ஏழைகளின் இதயங்களில்
என்றும் வாழுகின்றாய்..!
நாடோடியாய் இருந்த நீ
நம் மக்களின் மனதில்
நாடோடி மன்னனாய் வீற்றிருக்கின்றாய்..!
உலகம் சுற்றிய வாலிபனே..!
இந்த பூமி உனைப் பிரிந்து
இன்றோடு 22 ஆண்டுகளாயிற்று..!
எங்களின் கண்களும் குளமாயிற்று..!
மனங்களும் கனமாயிற்று..!

(எங்களின் இதயக்கனிக்கு என் கண்ணீர் கவியாஞ்சலி சமர்ப்பணம்)



Tuesday 1 December, 2009

எயிட்ஸ் எனும் எமன்..! - வசன கவிதை



குரங்கிலிருந்து
மனிதன்
வந்தான் சரி -
இது டார்வினின்
உயிரியில் பரிணாமக்
கொள்கை...

குரங்கிலிருந்து
மனிதனுக்கு
எயிட்ஸ் வந்ததா..? -
இதென்ன
உயிர்க் கொல்லிக்
கொள்கையா..?

பெண்ணின்றி
ஆணில்லை...
ஆணின்றி
பெண்ணில்லை...
ஆதாம் ஏவாள்
காலத்துக் கொள்கை
என்பர் - சரி...

எயிட்ஸ்
இன்றி மனித
இனமே இல்லை
என்ற நிலையை
உருவாக்குவது
எந்தக் கொள்கையப்பா..?

இன்பத்தை
நுகர்வதில்
இரு பாலருக்கும்
உரிமை உண்டு...
உணர்ச்சிகள் உண்டு...
அதற்கென உறவும் உண்டு...

மறுக்கவில்லை
உமது மன உணர்ச்சிகளை...
உமை யாரும்
மதிக்காமல்
இருக்கவில்லை...

நோய், பிணி, மரணம்
இன்பம், துன்பம்
என அனைத்தும்
இரு பாலருக்கும்
பொதுவாகும்...
அதுவே இயற்கையின்
படைப்பாகும்...

ஒருவனுக்கு
ஒருத்தியென வாழக்
கற்றால்...
ஒருத்திக்கு
ஒருவனென வாழக்
கற்றால்...
ஒப்பற்ற வாழ்க்கை
உங்கள் கையில்
இன்பங்கள் எப்போதும்
உங்கள் பையில்

சில்லறையை வீசி விட்டு
சிற்றின்பம்
நுகர்வதற்க்கு முன்
சிந்தையில்நிறுத்துங்கள்...
முடிந்த பின்னால்
சீரழிந்து போவீர்கள்
என்பதை..?

உமை நம்பி
மனையுண்டு
குழந்தையுண்டு
கோவிலெனக்
குடும்பமுண்டு...
குணத்தைக் கெடுத்துக்
கொள்ளாதே...
கொடும் எயிட்ஸை
நீ வாங்காதே...


ஐந்து நிமிட
சுகத்திற்கு
அற்பமாய் உன்
ஆயுளை
அழித்துக் கொள்ளாதே...

*****

நண்பனொருவன்
செய்த வினை
அவன் மனையை பாதித்தது
அவனுக்கு பிறந்த மகவைப் பாதித்தது
நோயின் கொடுமை தாளாமல்
விரைந்து மாண்டான் அவன்...

விந்தால் கெட்டான் அவன்...

அன்பு மொழி பேசும்
மனையாள்
செய்த பாவமென்ன...
அவள் பிறந்த வீட்டின்
ராஜ வாழ்க்கை
அழிந்து போவதென்ன...

கணவனுடன்
வாழ வந்த கண்மணிக்கு
அவள் கணவன்
கொடுத்த பரிசு அது
கொடிய நோயன்றோ...
உயிர்க்கொல்லி நோயன்றோ...

கட்டிய கணவனுடன்
வாழ வந்த கண்மணி
உயிர்க்கொல்லி நோயுடன்
வாழ்கின்ற கொடுமை போகுமோ
அவள் கோலம் மாறுமோ...

அவன் செய்த பிழையால்
அவன் மனைவி
தப்பவில்லை...
அந்தோ...
அவர்கள் குழவியும்
தப்பவில்லை...

வாழ வந்த
அக்குழந்தைக்கு
பிறப்பு வாயிலிலே
வாய்க்கரிசி...
வீசி விட்டு மாண்டானே
எயிட்ஸால்தான் வீழ்ந்தானே...

பூக்க வந்த பூவது
பாழும் மண்ணில் பூத்தது
எயிட்ஸ் நோய்க் குழந்தையாய்...
அக்குழந்தை செய்த பிழையென்ன
அனாதையாய் நிற்பதென்ன
ஆதரவு காட்ட யார்..?
அற்பாயுளில் போவதார்..?

போதுமடா இக் கொடுமை
பொல்லாத நோய் இதடா...
உயிர் குடிக்கின்ற
நோயிதுடா...
இல்லாளை நேசியடா
இல்லை உனக்கு துன்பமடா...

*****