Thursday 24 September, 2009

என் தேகத்தில் சந்தேகம்..! - வசன கவிதை

அழகிய நீர்நிறை குளத்தில்
வெண்தாமரை வீற்றிருப்பதை
கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...
இன்றோ சாலையில் காண்கிறேன்
ஓர் அழகிய வெண்தாமரை
நீரில் நனைந்தபடி..!

என்ன விந்தையடா..?
யார் செய்த மாயமடா..?
சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!
தாமரையை நீர் நெருங்காதே...?

என் தேகத்தில் சந்தேகம் முளைக்க
அத்தாமரையை நெருங்கினேன்...
அருகில் சென்றபோதுதான் தெரிந்தது
அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?

அழகிய அன்னம் அற்புதமாக
மழையை ரசித்தபடி நின்றிருக்க
அதனிடம் வினவினேன்...
மழை கண்டு வந்தாயோ அன்னமே..?
இந்த மனம் வேண்டி வந்தாயோ
பொற்கிண்ணமே..?

பதிலில்லை...
அதற்கு பதிலாக
தன் வெண்முத்து பற்கள்
தெரியும்படி மின்னலாய்
சிந்திய புன்னகையை என் முகத்தில்
விசிறியடித்தது...

கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு
இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?

(தன் காதலி மழையில் நனைந்தபடி, மழையை ரசித்துக் கொண்டிருக்க... அவளது காதலனோ அவள் நனையும் அழகைக் கண்டு கவிதையாக உளறுகிறான்.. அதன் விளைவே இக்கவிதை...)



Thursday 17 September, 2009

பகுத்தறிவுப் பகலவரே..! - வசனகவிதை




பகுத்தறிவுப் பகலவரே..!
புரட்சிக்
கருத்துக்களை பகர்ந்தவரே..!

கொடுஞ் சாதிகளை எதிர்த்தவரே..!
சாதிக்
கொடுமைகளை கொளுத்தியவரே..!

பெண்ணியததின் திருமகரே..!
பெண்
விடுதலையின் தலை மகரே..!

அறிவார்ந்த பெரியாரே..!
திராவிடத்தின்
அறியாமையினை அகற்றியவரே..!

மூடநம்பிக்கைகளை ஓழித்தவரே..!
எதையும்
முத்தாய்ப்பாய்ச் சொன்னவரே..!

ஏன்… எதற்கு… எப்படி என்றவரே..!
எதையும்
ஆராய்ந்து செய் என்றவரே..!

ஏற்றத் தாழ்வை அழித்தவரே..!
எல்லோரும்
எங்கும் சமம் என்றவரே..!

ஆரியத்தை அழித்தவரே..!
தமிழ்த்
திராவிடத்தை வளர்த்தவரே..!

ஒடுக்கப்பட்டவர்களின் ஒளியாரே..!
அவர்தம்
உரிமைகளை மீட்டெடுத்தவரே..!

வைக்கம் போராட்ட வீரரே..!
தீண்டாமையை
தீயிட்டழித்த தமிழ்த் தீரரே..!

விதவை மணத்தினை நடத்தியவரே..!
அதை
உலகெங்கும் நடாத்தியவரே..!

இறை மறுப்பை காட்டியவரே..!
பலருக்கும்
பகுத்தறிவை ஊட்டியவரே..!

உண்மையின் பாதுகாவலரே..!
பெண்ணியத்தின்
பெரும் போர் வீரரே..!

சின்னத்தாய் பெற்றெடுத்த சீலரே..!
தமிழ்த்தாய்
தத்தெடுத்த தமிழருவிக் காவலரே..!

இன்றோடு நீ பிறந்து 131 ஆண்டுகளாயிற்றே..!
இப் பொன்னாளில்
உன்னை நினைப்பவர்கள் சிலரே..!



Tuesday 15 September, 2009

பேரறிஞர் அண்ணா... - வசன கவிதை



பெரியாரின் தளபதி நீ..!
வறியோரின்
விளை நிலம் நீ..!

திராவிடத்தின் உறுப்பு நீ..!
மூடத்தனத்தை
சாம்பலாக்கிய நெருப்பு நீ..!

காஞ்சி நகர் வைரம் நீ..!
தமிழ்க்
கண்டெடுத்த வைடூரியம் நீ..!

சென்னையை மாற்றினாய்  நீ..!
நேர்த்தியாய்
தமிழ் நாடென்றாக்கினாய் நீ..!

தமிழை வளர்த்தாய் நீ..!
தமிழை
வளர்த்த தாய் நீ..!

பேரறிஞப் பெருமகனாம் நீ..!
தமிழகத்தின்
தலை மகனாம் நீ..!

அன்னமிட்ட கை நீ
தமிழ்க்
கன்னலிட்ட வைகை நீ..!

உதய சூரியன் நீ..!
இம்மண்ணில்
இன்று உதித்தவனும் நீ..!

நூற்றாண்டின் சூரியன் நீ..!
தமிழ்ச்
சான்றோரின் சந்திரன் நீ..!

திராவிடத்தின் இருப்பு நீ..!
ஆரியப்
பகைவர்க்கு நெருப்பு நீ..!

பகுத்தறிவுச் சுடர் நீ..!
பலருக்கு
வாழ்வழித்த சுடர் நீ..!

நூற்றாண்டு கண்டாய் நீ..!
தமிழே
எமையுன்னோடு சேர்ப்பாய் நீ..!



Tuesday 1 September, 2009

கவியமுதம் - வசனகவிதை

அன்பானவளே
நீ இங்கு நலம்
நான் அங்கு நலமா..?

நமக்கு குழந்தை - அதிலும்
நான் விரும்பிய பெண் குழந்தை
பிறந்து விட்டதென்றாய்..!

அப்பெண்ணிற்கு அமுதமென்று
பெயரிட்டதாகவும் நுண்ணலைபேசி மூலம்
உச்சி முகர்ந்'தாய்..!'

அமுதம் வந்தது கண்டு
மட்டற்ற மகிழ்ச்சியில்
என் மனம் துள்ளிக் குதிக்கிறது..!

அத்தூயவளைக் காண
எந்தன் உள்ளம்
ஏக்கத்தில் துடிக்கிறது..!

பாழும் பணியின்
காரணமாக
நான் சென்னையில்..!

பாசத்தின் காரணமாய்
நீயும் என் சேயும்
என் பெற்றோரிடத்தில்..!

விரைந்து வருவேன்...
விண்மீனைப் பார்ப்பேன்
என் மீனை ரசிப்பேன்..!

கட்டிக் கரும்புகளே... கமல மலர்களே...
காத்திருங்கள்
காற்றினும் கடிந்து வருகிறேன்..!

என் மகள் பிறந்தாளென்ற
செய்தி கேட்டதும் - என்
எழுதுகோல் காகிதத்தை முத்தமிட...

நாம் பெற்ற
அமுதத்திற்கு
இதோ கவியமுதம்..!

உன்னில் நான்...
என்னில் நீ...
நம்முள் அமுதம்..!

விண்ணில் நீ...
உன் கண்ணில் நான்...
தாய் மண்ணில் அமுதம்..!

நினைவில் நான்...
கனவில் நாம்...
உருவில் அமுதம்..!

என் நினைவுகள் நீ ரசிக்கும் பாடலில்...
உன் உறவுகள் நம் தேடலில்...
அமுதம் நம் கூடலில்..!

நீ பொறுமை...
நான் கருமை...
அமுதம் நம் பெருமை..!

நீ எந்தன் பிரியம்...
நானுந்தன் பிரியம்...
அமுதம் நம் பிரியம்..!

நான் உந்தன் மோகம்...
நீ எந்தன் தாகம்...
அமுதம் நம் ராகம்..!

நீ பொன்மான்...
நான் பொல்லாத மான்...
அமுதம் நம் புள்ளிமான்..!

(பணியின் காரணமாக நான் சென்னையில் இருக்க, என் காதலி வேறிடத்தில் இருக்கிறாள்... அவளது கனவில் 'எனக்கும், அவளுக்கும் திருமணமாகி விட்டது என்றும், அவள் ஆசைப்படி பெண் மகளைப் பெற்று விட்டாள் என்றும்... என் பெற்றோருடன் இருக்கும் அவள், என்னிடம் அலைபேசி மூலம் மகளைப் பெற்ற மகிழ்ச்சியை தெரிவிக்கிறாள்... அப்பெண் மலருக்கு நான் ஆசைபட்டபடி அமுதம் என பெயர் சூட்டியதாகவும் தெரிவித்தாள்...  மறுநாள் என்னிடம் அலைபேசியில் இக்கனவைத் தெரிவித்து, கவி புனையும் படி கேட்டாள்... அதன் விளைவே இந்த வசன கவிதை..)