Friday, 13 November, 2009

என் கேள்வியும்..? பாரத மாதாவின் பதிலும்..! - வசன கவிதைஏ... பாராத மாதா
பார்த்தாயா உன் பாமர மக்கள்
படும் நிலையை..?
பசியையும், பட்டினியையும்
உடன் பிறவா உறவுகளாகக்
கொண்டுள்ளனரே..!?

பரவேஷம் போடும்
அரசியல் நாய்களின்
வெறி பிடித்த வாயைப்
பார்த்தாயா..?
பாமரனின் கழுத்தைக்
குதறிச் சிரிக்கும்
அந்நாய்களின் வெறியாட்டத்தைக்
கண்டாயா..?

அரசியல் சுரண்டல்கள்
ஒருபுறமெனில்
சாதிக் கொடுமையும்
மதப் பேய்களின்
மதவெறிக் கொலைகளும்
தினம் பல உயிர்களைப்
பலி கொள்கின்றதைப் பார்த்தாயா..?

பாரடி பாரத மாதா...
உன் மக்கள் படும் துயரை...
இனியும் ஏனடி மவுனம்..?
உன் நேர்மையெனும்
நெற்றிக்கண்ணால்
அராஜகம் செய்யும் அரசியல் நாய்களை
அடியோடு அழித்து விடு..!

அன்பு எனும் அமிழ்தத்தைக் கொண்டு
சாதி, மதப் பேய்களை
சடுதியில் ஒழித்து விடு..!
ஏற்றத் தாழ்வு எனும்
எச்சில் சகதியை
எளிதில் போக்கி விடு..!

செய் இவற்றையெல்லாம்
செவ்வனே செய்...
அதுவும் இப்பொழுதே செய்..!
இவர்களெல்லாம்
உன் பிள்ளைகளன்றோ..?

ஏனடி இன்னும் மவுனம்
ஏன் இந்த மவுனம்...
பதில் சொல்லடி பாரத மாதா..?

'என்னிடம் கேள்வி கேட்கும்
கெட்டிக்காரா..!
சொல்கிறேன் கேளடா..?

அடே மனிதா...
இவைகளெல்லாம்
உங்களால் விளைந்தது காண்..!
வருணாசிரமத்தை
வகுத்தது நீங்கள்...
வண்ணங்களைப் போல்
எண்ணத்திற்கொரு
சாதியைப் புகுத்தியது நீங்கள்...
மதம் கொண்ட யானைப் போல்
மதங்களை உருவாக்கியதும் நீங்கள்...

சாதி, மதமெனும் விஷ விதையை
உங்களுக்குள் விதைத்து
அனைவரிடத்தும்
விரவ விட்டதும் நீங்களே..!
இப்போது அறுவடை செய்கிறீர்கள்..!
அதன் பலனை அனுபவிக்கிறீர்கள்..!

இவைகளனைத்தும்
உங்களால் விளைந்ததே...
இன்னும்
விளக்கட்டுமா..?
பொருள் விளங்க விளக்கட்டுமா..?

அரசியல் நாய்களின்
வெறியாட்டமும் உங்களால்
விளைந்ததே...
உங்களுக்கு எங்கேயடா போயிற்று
பகுத்தறியும் ஆறாம் அறிவு..!

விலங்குகள் போல்
உங்களை நீங்களே ஏனடா
அழித்துக் கொள்கிறீர்கள்..!
சுரண்டல்கள் என்ற பெயரிலும்
ஏமாற்று வழிகளிலும்
ஏனடா எல்லோரையும்
அழித்துக் கொள்(ல்)கிறீர்கள்..!

உங்களை நீங்களே
திருத்திக் கொள்ளுங்கள்...
விழித்தெழுங்கள்...
வீணர்களை விரட்டியடியுங்கள்
நலம் பெறுவீர்கள்..!'

அசீரீரியாய் ஒலித்து மறைந்தது
பாராத மாதாவின் குரல்..!

அற்ப மனிதர்களே
அன்பு மட்டுமே
அன்பை விளைவிக்கும்..!
அறிவு மட்டுமே
அறியாமையை அழித்து
ஆற்றலைக் கொடுக்கும்..!
விழிப்புணர்வு மட்டுமே
வெளிச்சத்தைக் கொடுக்கும்..!

இனியேனும் திருந்துங்கள்
நீங்கள் பாரதத்தைக்
காப்பாற்ற வேண்டாம்..!
உங்களை நீங்களே
நல்லவழியில்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்...
நம் பாரதம் தானாகவே
காப்பாற்றப்படும்..!

(2004 அக்டோபர் 11 -ம் தேதி, காலை 10.10 மணியளவில் பண்ருட்டியிலிருந்து கண்டரக்கோட்டைக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, எழுதிய வசன கவிதை... சிற்சில மாற்றங்களுடன் இங்கே மீள்பதிவிடுகிறேன்...)
Tuesday, 3 November, 2009

பூரண சந்திரன்..! - வசன கவிதை

நான்…
பூரண சந்திரன்…
வானத்து நிலவு…
என்றும் குளிர்ச்சியானவன்…
எளிதில் அன்பிற்கு அடிமையாகுபவன்…
நிலவைப் போல் வெள்ளை மனதுடையவன்
என்றெல்லாம்
என்னுடன் பழகிய என்னவர்கள்…
சொல்லக் கேட்டிருக்கிறேன்…நான் பூரண சந்திரன்
எனக்கு வளர்பிறையுமில்லை…
தேய் பிறையுமில்லை
நான் என்றும் நானாகவே
முழுச் சந்திரனாகவே வாழ்கிறேன்…
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
வாழ்ந்து கொண்டிருப்பேன்…

நான் பிறரை நோக்கும் பார்வை…
என் சார்ந்ததாக
என் மனம் சார்ந்ததாக
இருக்கிறது…
இது சரியெனில்… அது சரியே…
இது தவறெனில்.. இது தவறே…

நான் எல்லோரையும்
சமநோக்குடனே பார்க்கிறேன்
பிறர் என்னைப் பார்க்கும் பார்வைகள்
வித்தியாசமானவைகளாக
இருக்கின்றன..!
அவர்கள் என்னை
எவ்வகையில் பார்க்கிறார்களோ…
நான் அவர்களுக்கு
அவ்வகையிலேயே காட்சியளிக்கிறேன்..!

என்னைப்
புரிந்து கொண்டவர்களுக்கு
முழுமையாகப்
புரிந்து கொண்டவர்களுக்கு
நான் பூரண சந்திரனாக
காட்சியளிக்கிறேன்..!

என் மேல்…
என் வளர்ச்சியின் மேல்
அக்கறை கொண்டவர்களுக்கு
நான் வளர்பிறையாக
காட்சியளிக்கிறேன்…

என் மேல் அன்பு வைத்துள்ள
அன்பு வைத்துக் கொண்டிருக்கிற
அன்பு உள்ளங்கள்
அத்தனை பேருக்கும்
மூன்றாம் பிறையாக காட்சியளிக்கிறேன்…

என்னை
மறக்க நினைப்பவர்களுக்கும்
வெறுக்க நினைப்பவர்களுக்கும்
நான் தேய் பிறையாக
காட்சியளிக்கிறேன்…

என்னை
விரோதியாகப் பார்க்கும்
ந(ண்)பர்களுக்கு
அமாவாசையாகக்
காட்சியளிக்கிறேன்…நான் பூரண சந்திரன்
எனக்கு வளர்பிறையுமில்லை…
தேய் பிறையுமில்லை
பிறர் என்னை
எவ்வகையில் பார்க்கிறார்களோ…
நான் அவர்களுக்கு
அவ்வகையிலேயே காட்சியளிக்கிறேன்..!

(பணியின் காரணமாக நான் பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 17.08.2004 அன்று நள்ளிரவு,, எனது நாட்குறிப்பேட்டில் (11.30 மணிக்கு) எழுதி வைத்த வசன கவிதை… இது நம் அனைவருக்கும் பொருந்தும் என்பதால் இங்கே பதிவிலிடுகிறேன்…)