Friday 4 June, 2010

உன் குறும்புகளத்தனையும் தேன்..! - வசன கவிதை!


வேண்டாம் இப்பிள்ளையென
உன்னை நினைத்தேன்..!
நனி மகவே
உன் பிறப்பால்...
உன் சிறப்பால்...
உனையா நான்
வேண்டாமென நினைத்தேன்
என்று இன்றளவும்
வெட்கப்படுகின்றேன்..!

உனையா வேண்டாமென நினைத்தேன்
என் திருமகவே
உன் குறும்புகளத்தனையும் தேன்..!
உன் குறும்புகளைப் பார்த்து
உன்னோடு சேர்ந்தபடி
துள்ளிக் குதித்தேன்..!

அப்பா என நீயழைக்கையில்
அகிலத்தை நான் மறக்க
வேண்டுமென்பதற்க்காகத்தானோ
அகிலனனென பெயர் கொண்டாய்..!
முகிலென நீயிருக்க...
இல்லத்தில்
மழையென மகிழ்ச்சி
இங்கே பொழியுதடா..!

உன் மழலைப் பேச்சழகும்
மறக்கவியலா குறும்புகளும்
மான் போன்ற நடையழகும்
யாவரையும் கவருமடா..!
உன் போன்றதொரு
பிள்ளை வேண்டுமென
பிறர் மனதில் தோன்றுமடா..!

அகிலமாளப் பிறந்தாயோ
நானறியேன் அகிலா..!
அன்பால் நீ அனைவரையும்
ஆளுகின்றாய்..!
அதை நான் உணருகின்றேன்
மகிழ்வாய்..!

உன்றன் தாய்
பெண் பிள்ளை நீயென
நினைத்து ஆண்பிள்ளையாக
உனைப் பெற்றாள்..!
உவகை  கொண்டாள்..!

இத்தோடு நீ பிறந்து
ஆண்டிரண்டு ஆனதடா அகிலா..!
என மனமெங்கும்
மகிழ்ச்சி வெள்ளம் பரவுதடா அகிலா..!
நீ என்றென்றும் வாழவேண்டும்
பிறந்த தாய்நாடு
பெருமைப் படும்படி
நீ  வாழவேண்டுமகிலா..!

வாழ்க நீ பல்லாண்டு...
பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு..!