Showing posts with label சுயம். Show all posts
Showing posts with label சுயம். Show all posts

Friday, 4 June 2010

உன் குறும்புகளத்தனையும் தேன்..! - வசன கவிதை!


வேண்டாம் இப்பிள்ளையென
உன்னை நினைத்தேன்..!
நனி மகவே
உன் பிறப்பால்...
உன் சிறப்பால்...
உனையா நான்
வேண்டாமென நினைத்தேன்
என்று இன்றளவும்
வெட்கப்படுகின்றேன்..!

உனையா வேண்டாமென நினைத்தேன்
என் திருமகவே
உன் குறும்புகளத்தனையும் தேன்..!
உன் குறும்புகளைப் பார்த்து
உன்னோடு சேர்ந்தபடி
துள்ளிக் குதித்தேன்..!

அப்பா என நீயழைக்கையில்
அகிலத்தை நான் மறக்க
வேண்டுமென்பதற்க்காகத்தானோ
அகிலனனென பெயர் கொண்டாய்..!
முகிலென நீயிருக்க...
இல்லத்தில்
மழையென மகிழ்ச்சி
இங்கே பொழியுதடா..!

உன் மழலைப் பேச்சழகும்
மறக்கவியலா குறும்புகளும்
மான் போன்ற நடையழகும்
யாவரையும் கவருமடா..!
உன் போன்றதொரு
பிள்ளை வேண்டுமென
பிறர் மனதில் தோன்றுமடா..!

அகிலமாளப் பிறந்தாயோ
நானறியேன் அகிலா..!
அன்பால் நீ அனைவரையும்
ஆளுகின்றாய்..!
அதை நான் உணருகின்றேன்
மகிழ்வாய்..!

உன்றன் தாய்
பெண் பிள்ளை நீயென
நினைத்து ஆண்பிள்ளையாக
உனைப் பெற்றாள்..!
உவகை  கொண்டாள்..!

இத்தோடு நீ பிறந்து
ஆண்டிரண்டு ஆனதடா அகிலா..!
என மனமெங்கும்
மகிழ்ச்சி வெள்ளம் பரவுதடா அகிலா..!
நீ என்றென்றும் வாழவேண்டும்
பிறந்த தாய்நாடு
பெருமைப் படும்படி
நீ  வாழவேண்டுமகிலா..!

வாழ்க நீ பல்லாண்டு...
பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு..!



Tuesday, 3 November 2009

பூரண சந்திரன்..! - வசன கவிதை

நான்…
பூரண சந்திரன்…
வானத்து நிலவு…
என்றும் குளிர்ச்சியானவன்…
எளிதில் அன்பிற்கு அடிமையாகுபவன்…
நிலவைப் போல் வெள்ளை மனதுடையவன்
என்றெல்லாம்
என்னுடன் பழகிய என்னவர்கள்…
சொல்லக் கேட்டிருக்கிறேன்…



நான் பூரண சந்திரன்
எனக்கு வளர்பிறையுமில்லை…
தேய் பிறையுமில்லை
நான் என்றும் நானாகவே
முழுச் சந்திரனாகவே வாழ்கிறேன்…
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
வாழ்ந்து கொண்டிருப்பேன்…

நான் பிறரை நோக்கும் பார்வை…
என் சார்ந்ததாக
என் மனம் சார்ந்ததாக
இருக்கிறது…
இது சரியெனில்… அது சரியே…
இது தவறெனில்.. இது தவறே…

நான் எல்லோரையும்
சமநோக்குடனே பார்க்கிறேன்
பிறர் என்னைப் பார்க்கும் பார்வைகள்
வித்தியாசமானவைகளாக
இருக்கின்றன..!
அவர்கள் என்னை
எவ்வகையில் பார்க்கிறார்களோ…
நான் அவர்களுக்கு
அவ்வகையிலேயே காட்சியளிக்கிறேன்..!

என்னைப்
புரிந்து கொண்டவர்களுக்கு
முழுமையாகப்
புரிந்து கொண்டவர்களுக்கு
நான் பூரண சந்திரனாக
காட்சியளிக்கிறேன்..!

என் மேல்…
என் வளர்ச்சியின் மேல்
அக்கறை கொண்டவர்களுக்கு
நான் வளர்பிறையாக
காட்சியளிக்கிறேன்…

என் மேல் அன்பு வைத்துள்ள
அன்பு வைத்துக் கொண்டிருக்கிற
அன்பு உள்ளங்கள்
அத்தனை பேருக்கும்
மூன்றாம் பிறையாக காட்சியளிக்கிறேன்…

என்னை
மறக்க நினைப்பவர்களுக்கும்
வெறுக்க நினைப்பவர்களுக்கும்
நான் தேய் பிறையாக
காட்சியளிக்கிறேன்…

என்னை
விரோதியாகப் பார்க்கும்
ந(ண்)பர்களுக்கு
அமாவாசையாகக்
காட்சியளிக்கிறேன்…



நான் பூரண சந்திரன்
எனக்கு வளர்பிறையுமில்லை…
தேய் பிறையுமில்லை
பிறர் என்னை
எவ்வகையில் பார்க்கிறார்களோ…
நான் அவர்களுக்கு
அவ்வகையிலேயே காட்சியளிக்கிறேன்..!

(பணியின் காரணமாக நான் பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 17.08.2004 அன்று நள்ளிரவு,, எனது நாட்குறிப்பேட்டில் (11.30 மணிக்கு) எழுதி வைத்த வசன கவிதை… இது நம் அனைவருக்கும் பொருந்தும் என்பதால் இங்கே பதிவிலிடுகிறேன்…)




Wednesday, 19 August 2009

என் அறிமுகம்

வசன கவிதை எழுதுவது எப்படி? அதன் விதிகள், இலக்கணங்கள் என்னென்ன என்பதை நானறியேன்... மகா கவி பாராதியின் வசன கவிதை படித்'தேன்'.

அதன்பிறகு, எனக்குள்ளும் அந்த ஆசை முளைத்துக் கிளைத்தது. எழுதத் துவங்கிவிட்டேன். எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கருத்துப் பிழையின்றி எழுதுவேன்...

வசனகவிதைக்குரிய இலக்கணங்களை மீறியருந்தால், தமிழார்வலர்கள், தமிழாய்ந்தவர்கள் இச்சிறுவனை மன்னித்தருள வேண்டுகிறேன். நன்றி