Tuesday 3 November, 2009

பூரண சந்திரன்..! - வசன கவிதை

நான்…
பூரண சந்திரன்…
வானத்து நிலவு…
என்றும் குளிர்ச்சியானவன்…
எளிதில் அன்பிற்கு அடிமையாகுபவன்…
நிலவைப் போல் வெள்ளை மனதுடையவன்
என்றெல்லாம்
என்னுடன் பழகிய என்னவர்கள்…
சொல்லக் கேட்டிருக்கிறேன்…



நான் பூரண சந்திரன்
எனக்கு வளர்பிறையுமில்லை…
தேய் பிறையுமில்லை
நான் என்றும் நானாகவே
முழுச் சந்திரனாகவே வாழ்கிறேன்…
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
வாழ்ந்து கொண்டிருப்பேன்…

நான் பிறரை நோக்கும் பார்வை…
என் சார்ந்ததாக
என் மனம் சார்ந்ததாக
இருக்கிறது…
இது சரியெனில்… அது சரியே…
இது தவறெனில்.. இது தவறே…

நான் எல்லோரையும்
சமநோக்குடனே பார்க்கிறேன்
பிறர் என்னைப் பார்க்கும் பார்வைகள்
வித்தியாசமானவைகளாக
இருக்கின்றன..!
அவர்கள் என்னை
எவ்வகையில் பார்க்கிறார்களோ…
நான் அவர்களுக்கு
அவ்வகையிலேயே காட்சியளிக்கிறேன்..!

என்னைப்
புரிந்து கொண்டவர்களுக்கு
முழுமையாகப்
புரிந்து கொண்டவர்களுக்கு
நான் பூரண சந்திரனாக
காட்சியளிக்கிறேன்..!

என் மேல்…
என் வளர்ச்சியின் மேல்
அக்கறை கொண்டவர்களுக்கு
நான் வளர்பிறையாக
காட்சியளிக்கிறேன்…

என் மேல் அன்பு வைத்துள்ள
அன்பு வைத்துக் கொண்டிருக்கிற
அன்பு உள்ளங்கள்
அத்தனை பேருக்கும்
மூன்றாம் பிறையாக காட்சியளிக்கிறேன்…

என்னை
மறக்க நினைப்பவர்களுக்கும்
வெறுக்க நினைப்பவர்களுக்கும்
நான் தேய் பிறையாக
காட்சியளிக்கிறேன்…

என்னை
விரோதியாகப் பார்க்கும்
ந(ண்)பர்களுக்கு
அமாவாசையாகக்
காட்சியளிக்கிறேன்…



நான் பூரண சந்திரன்
எனக்கு வளர்பிறையுமில்லை…
தேய் பிறையுமில்லை
பிறர் என்னை
எவ்வகையில் பார்க்கிறார்களோ…
நான் அவர்களுக்கு
அவ்வகையிலேயே காட்சியளிக்கிறேன்..!

(பணியின் காரணமாக நான் பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 17.08.2004 அன்று நள்ளிரவு,, எனது நாட்குறிப்பேட்டில் (11.30 மணிக்கு) எழுதி வைத்த வசன கவிதை… இது நம் அனைவருக்கும் பொருந்தும் என்பதால் இங்கே பதிவிலிடுகிறேன்…)




No comments: