Tuesday 1 September, 2009

கவியமுதம் - வசனகவிதை

அன்பானவளே
நீ இங்கு நலம்
நான் அங்கு நலமா..?

நமக்கு குழந்தை - அதிலும்
நான் விரும்பிய பெண் குழந்தை
பிறந்து விட்டதென்றாய்..!

அப்பெண்ணிற்கு அமுதமென்று
பெயரிட்டதாகவும் நுண்ணலைபேசி மூலம்
உச்சி முகர்ந்'தாய்..!'

அமுதம் வந்தது கண்டு
மட்டற்ற மகிழ்ச்சியில்
என் மனம் துள்ளிக் குதிக்கிறது..!

அத்தூயவளைக் காண
எந்தன் உள்ளம்
ஏக்கத்தில் துடிக்கிறது..!

பாழும் பணியின்
காரணமாக
நான் சென்னையில்..!

பாசத்தின் காரணமாய்
நீயும் என் சேயும்
என் பெற்றோரிடத்தில்..!

விரைந்து வருவேன்...
விண்மீனைப் பார்ப்பேன்
என் மீனை ரசிப்பேன்..!

கட்டிக் கரும்புகளே... கமல மலர்களே...
காத்திருங்கள்
காற்றினும் கடிந்து வருகிறேன்..!

என் மகள் பிறந்தாளென்ற
செய்தி கேட்டதும் - என்
எழுதுகோல் காகிதத்தை முத்தமிட...

நாம் பெற்ற
அமுதத்திற்கு
இதோ கவியமுதம்..!

உன்னில் நான்...
என்னில் நீ...
நம்முள் அமுதம்..!

விண்ணில் நீ...
உன் கண்ணில் நான்...
தாய் மண்ணில் அமுதம்..!

நினைவில் நான்...
கனவில் நாம்...
உருவில் அமுதம்..!

என் நினைவுகள் நீ ரசிக்கும் பாடலில்...
உன் உறவுகள் நம் தேடலில்...
அமுதம் நம் கூடலில்..!

நீ பொறுமை...
நான் கருமை...
அமுதம் நம் பெருமை..!

நீ எந்தன் பிரியம்...
நானுந்தன் பிரியம்...
அமுதம் நம் பிரியம்..!

நான் உந்தன் மோகம்...
நீ எந்தன் தாகம்...
அமுதம் நம் ராகம்..!

நீ பொன்மான்...
நான் பொல்லாத மான்...
அமுதம் நம் புள்ளிமான்..!

(பணியின் காரணமாக நான் சென்னையில் இருக்க, என் காதலி வேறிடத்தில் இருக்கிறாள்... அவளது கனவில் 'எனக்கும், அவளுக்கும் திருமணமாகி விட்டது என்றும், அவள் ஆசைப்படி பெண் மகளைப் பெற்று விட்டாள் என்றும்... என் பெற்றோருடன் இருக்கும் அவள், என்னிடம் அலைபேசி மூலம் மகளைப் பெற்ற மகிழ்ச்சியை தெரிவிக்கிறாள்... அப்பெண் மலருக்கு நான் ஆசைபட்டபடி அமுதம் என பெயர் சூட்டியதாகவும் தெரிவித்தாள்...  மறுநாள் என்னிடம் அலைபேசியில் இக்கனவைத் தெரிவித்து, கவி புனையும் படி கேட்டாள்... அதன் விளைவே இந்த வசன கவிதை..)




No comments: